பாலர் மலர் தமிழ் கல்விக் கழக வரலாறு

எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து சிட்னிக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர், இந்நாட்டின் பிரதான மொழியான ஆங்கிலத்தால் தங்கள் குழந்தைகளிடையே தமிழ் மொழியுடனான தொடர்பு மிகவும் நலிந்து வருவதை உணர்ந்தனர். 1977 ஆம் ஆண்டு, ஒரு குடும்ப நிகழ்ச்சியின் கூட்டத்தில் கலந்துகொண்ட சில தமிழ் ஆர்வலர்கள் பேசிக்கொண்டிருக்கையில், “நாம் ஏன் நம் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கக் கூடாது?” என்று எழுந்த ஒரு எளிய கேள்வியின் தொடர்ச்சியாக, அன்றே சிட்னி வாழ் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்க் கற்பிக்க வேண்டுமென முடிவு செய்தனர். ஒரு சிறிய புள்ளியில் இருந்து தொடங்கித்தானே, மிகப்பெரும் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன? மேற்கூறிய முடிவு எடுக்கப்பட்டவுடன், எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், திருமதி சரோ சீனிவாசன் மற்றும் திரு சீனிவாசன் அவர்கள் தாமாக முன்வந்து தங்கள் வீட்டில் தமிழ் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்தனர். பின்னர் இந்த இயக்கம் மேலும் பரவலாகி “பாலர்மலர் தமிழ்ப் பள்ளி” என உருவானது.

ஆஷ்பீல்ட் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த திரு.துரைராஜ் அவர்கள் முன்வந்து, அதேப் பள்ளி வளாகத்தில் தமிழ் வகுப்புகள் இயக்க மாநில அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தார்.பேராசிரியர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் அம்பிராஜன் தம்பதிகள், திருமதி மற்றும் திரு முனியப்பன் அவர்கள், டாக்டர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பலர் தமிழ் மொழியுடன் கதைகள், திருக்குறள் போன்றவைகளை கற்பித்தல் மூலம், பள்ளியினை மிக பிரபலமாக்க முக்கிய கருவிகளாக திகழ்ந்தனர். அதன் பிறகு பாலர்மலர் பள்ளி மாநில அரசின் சமூக மொழிப் பள்ளிகளுக்கான நிதியைப் பெறத்தொடங்கியது.

1991 ஆம் ஆண்டு வரை ஒரு சில தமிழ் ஆர்வலர்களால் நிர்வகிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை, 1992ல் ஒரு நிறுவனமாக முறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, “பாலர் மலர் தமிழ் கல்விக் கழகம்” என ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. டாக்டர் மனோகரன் அவர்கள் பாலர்மலரின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு கழகத்தின் வளர்ச்சி பிரமாண்டமாக இருந்தது. 1993ஆம் ஆண்டில் பள்ளியின் மற்றுமொரு கிளையாக 25 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் செவன்ஹில்ஸில் செயல்படத் தொடங்கியது. 1995ல் ஹோல்ஸ்வொர்தி கிளை, 2000 ஆம் ஆண்டில் டெனிஸ்டோன் கிளை, 2009ஆம் ஆண்டு குவேக்கர்ஸ் ஹில் கிளை, 2013ஆம் ஆண்டு ஹார்ன்ஸ்பி கிளை, 2015ஆம் ஆண்டில் நியூகாசில் கிளை மற்றும் 2017ஆம் ஆண்டு மின்டோ கிளை தொடங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் டெனிஸ்டோன் கிளை, ஹார்ன்ஸ்பி கிளையாக மாற்றப்பட்டு அப்பகுதி தமிழ் குழந்தைகள் தமிழ் கற்க வழிவகுத்தது. இப்பொது 7 பள்ளிகளில் சுமார் 850 மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர்.
பாலர்மலர் பள்ளிகளில் பல பெற்றோர்கள் ஆசிரியர்களாகவும், நிர்வாக குழுவினராகவும் தன்னார்வத் தொண்டாற்றி வருகின்றனர். பாலர் மலர் ஆசிரியர்கள், மாநில அரசு விதிகளின்படி சிட்னி பல்கலைக்கழகம் வழங்கும் மொழி கற்பித்தல் முறையில் முறையான பயிற்சி பெறுகின்றனர். பாலர்மலர் தமிழ்க் கல்விக் கழகம், நியூ சவுத்வேல்ஸ் தமிழ்ப் பள்ளிகளின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட பாட நூல்களை தன் பள்ளிகளில் பின்பற்றுகிறது.

பாலர் மலர் நியூசவுத்வேல்ஸில் வாழும் இளைய தலைமுறையினருக்குத் தமிழ் மொழியினையையும், கலாச்சாரத்தையையும் பயிற்றுவித்து, கூடுதலாக நடனம், இசை, நாடகம், வினாடிவினா போன்ற நிகழ்ச்சிகளையும், பாட்டு, மனனம் மற்றும் பேச்சுத் திறனை வெளிப்படுத்தும் களமாக விளங்கும் தமிழ்ப் போட்டிகளையும் நடத்துகிறது. 2019 முதல் நமது பாலர் மலர் பள்ளி மாணவர்கள் HSC தமிழ் தேர்வுகளில் பங்கு பெற ஆரம்பித்து சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து நமக்கு பெருமை தேடித்தர ஆரம்பித்து உள்ளனர். ஒன்று இரண்டாகி, இந்த வருடம் நமது பள்ளிகளில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் HSC தேர்விற்கு இந்த வருடம் தயாராகி வருகின்றனர்.
2021ஆம் ஆண்டு முதல், பாலர்மலர் பள்ளிக்கென தனியான தொலைபேசி எண், பாலர்மலர் பள்ளியின் இணைய வழி மாணவர் சேர்க்கை பதிவு திட்டம், பள்ளி மேலாண்மைக்கான அலுவலக மென்பொருள் திட்டம், பாலர் மலர் வலை ஒளித்தளம் என பல முன்னெடுப்புகளுடன் மின்னணு பாலர் மலராக ஒளிரத்தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு பாலர்மலர் தனது 45வது ஆண்டை நிறைவு செய்துள்ள‌ பாலர்மலர் பள்ளி அலுவல் குழு தவிர , தனியாக பாலர் மலர் தொழில் நுட்பக்குழு,பாலர் மலர் கல்விக்குழுவுடன் சேர்த்து பாலர் மலர் நிதிக்குழு என்றமைத்து பள்ளியை அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது.
பாலர்மலர் தமிழ்ப் பள்ளிகளைப் பற்றி மேலும் விபரம் அறிய எமது இணைய தளத்தை www.balarmalar.nsw.edu.au என்னும் முகவரியில் நாடுங்கள்.